தமிழ்நாட்டு தேர்தலில் வாக்களித்த இலங்கையர்.!

61

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக வாக்களித்ததாகக் கருதப்படும் 17 வெளிநாட்டு கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களைக் குடிவரவு அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காகப் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் சென்னை வானூர்தி நிலையத்தில் கனடா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குத் திரும்ப முயன்ற 15 பேர் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இருவர் மதுரை வானூர்தி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சந்திரசேகர ரகுபதி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டுப் பரிசோதனையின் போது இவர்களின் விரல்களில் இருந்த அழியாத தேர்தல் மையைக் கண்ட அதிகாரிகள், இவர்களைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாடு காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னை காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்ட விசாரணையில் இருவர் பெரம்பூர் மற்றும் கே.கே. நகர் தொகுதிகளில் வாக்களித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.