‘பஞ்சாப் கிங்ஸ் தோல்வியால்’.. 3ஆவது இடத்தை பிடிக்கப் போகும் சிஎஸ்கே: எப்படி தெரியுமா?

60

ஐபிஎல் 2026 சீசனின் முதல் பாதி ஆட்டங்களில், அதாவது முதல் 7 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, அடுத்த 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து, கடும் பின்னடைவில் இருக்கிறது.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 200/8 ரன்களை எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 19.5ஆவது ஓவரில் 205/4 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, 12 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. இன்று, சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 25+ ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 17 ஓவர்களில் வென்றாலோ சிஎஸ்கே அணி, 12 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று 3ஆவது இடத்தை பிடித்துவிடும்.

இதனால், இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டி, சிஎஸ்கேவுக்கு மிகமுக்கியமானதாக மாறியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸுக்கு சிக்கல்: பஞ்சாப் கிங்ஸ் அணி, அடுத்த 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு இருக்கும். இந்த அணி கடைசி 2 போட்டிகளில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில், பலமிக்க ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றியைப் பெறுவது மிகமிக கடினம். இதனால், பஞ்சாப் கிங்ஸுக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம் எனக் கருதப்படுகிறது.

சிஎஸ்கே வாய்ப்பு: சிஎஸ்கே அணி, 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்த 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றாக வேண்டும். முதலில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடுவார்கள். அடுத்து, பலமிக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடுவார்கள். இப்படி, இரண்டு பலமிக்க அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளதும், சிஎஸ்கேவுக்கு சிக்கலாகதான் பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விபரம்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, ஓபனர் பிரப்சிம்ரன் சிங் 57 (32) அபராமாக விளையாடி அசத்தினார். மற்ற டாப் ஆர்டர் பேட்டர்கள் பிரியன்ஸ் ஆர்யா 22 (17), கூப்பர் கானலி 21 (22), கேப்டன் ஷ்ரேயஸ் யர் 4 (2) ஆகியோர் எரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து, சூர்யான்ஸ் செட்ஜ் 8 (5), ஷசாங் சிங் 2 (3) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களை அவுட் ஆக, இறுதிக் கட்டத்தில் அஜ்மதுல்லா ஒமர்ஜாய் 17 பந்தில் 38 ரன்களை எடுத்து அசத்தினார். அடுத்து, விஷ்ணு வினோத் 15 (8), சேவியர் பார்ட்லெட் 18 (7) ஆகியோரும் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டதால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200/8 ரன்களை எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஜஸ்பரீத் பும்ரா, இன்று 7 பௌலர்களை பயன்படுத்தினார். இதில், ஷர்தூல் தாகூர் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். தீபக் சஹார் 4 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்தார்.

மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரியான் ரிகில்டன் 48 (23), திலக் வர்மா 75 (33) ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். மேலும், ரோஹித் சர்மா 25 (26), ரூதர்போர்ட் 20 (21), வில் ஜாக்ஸ் 25 (10) ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களை எடுத்ததால், மும்பை இந்தியன்ஸ் அணி, 19.5 ஓவர்கள் முடிவில் 205/4 ரன்களை எடுத்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

கடைசி ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வில் ஜாக்ஸ் ஒரு சிக்ஸரையும், திலக் வர்மா 2 சிக்ஸர்களையும் அடித்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.