ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கைக்கு நேர்ந்த சோகம் – O/L தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மாணவன் பலி! 

57

மொனராகலை, சிரிபுரகம பகுதியில் நெஞ்சை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள செய்தி அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 3ஆம் திகதி, சாமிக தேஷான் என்ற 17 வயது இளைஞன் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது கோர விபத்துக்குள்ளானார்.

விபத்து நடந்த அன்றே சாமிகவின் சகோதரி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமிக, சுமார் ஒரு வாரம் மரணத்துடன் போராடி கடந்த 11ஆம் திகதி உயிரிழந்தார்.

உயிரிழந்த சாமிக தேஷான், அண்மையில் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையை எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த ஒரு மாணவன் என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த சிரிபுரகம வாழ் மக்களையும் கண்ணீரில் நனைத்துள்ளது.