மருத்துவ ஆலோசனையின்றி விடப்பட்ட மருந்து; பறிபோன கண்பார்வை – இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!

102

29 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர், கடந்த திங்கட் கிழமை காலை காலி, கராபிட்டிய கண் மருத்துவ மனைக்கு மிகக் கடுமையான வலியுடனும், சிவந்த வலது கண்ணுடனும் வந்தார்.

“ஞாயிற்றுக் கிழமை மருத்துவ மனை மூடியிருக்கும் என்று நினைத்ததால் வரவில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால், அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவ மனைகளில் எப்போதும் ‘On-call’ மருத்துவர்கள் இருப்பார்கள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

அவரால் வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை, கண்ணிலிருந்து தொடர்ந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. வலியினால் தன் வலது கண்ணை இறுக மூடிக் கொண்டிருந்தார்.

“டாக்டர், என் கண் கொஞ்சம் சிவந்துதான் இருக்கு… ஆனா இந்த வலிய என்னால தாங்க முடியல” என்று கதறினார்..இது எவ்வாறு நடந்தது எனக்கேட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு கட்டுமானப் பணியிடத்தில் கிரைண்டர் (Grinder) இயந்திரத்தில் வேலை செய்த போது, ஒரு சிறிய துகள் கண்ணில் விழுந்ததாகவும் அதனை ஒரு சாதாரண விஷயம் என்று நினைத்து அலட்சியமாக இருந்ததாக கூறினார்.

பிறகு, ஒரு மருந்தகத்திற்குச் சென்று (யாரோ சொன்ன அறிவுரையை கேட்டு) ஆன்டிபயாடிக் (Antibiotic) சொட்டு மருந்தைப் பயன்படுத்தியுள்ளார்.

நிலைமை சரியாகாததால், அவராகவே ஸ்டெராய்டு (Steroid) கலந்த கண் மருந்தையும் பயன் படுத்தத் தொடங்கினார்.இங்குதான் விபரீதம் ஆரம்பித்தது.

பரிசோதனையில் கண்டறியப் பட்ட அதிர்ச்சி: நாங்கள் இயந்திரம் மூலம் பரிசோதித்தபோது கண்ட காட்சி பயங்கரமானது:

  • கண் மிக மோசமாக சிவந்திருந்தது.
  • விரல்களைக் கூட எண்ண முடியாத அளவுக்குப் பார்வை மங்கியிருந்தது.
  • கருவிழியின் (Cornea) மையத்தில் ஒரு வெள்ளை நிறத் தழும்பு உருவானது.
  • கருவிழியைச் சுற்றியுள்ள பகுதி தெளிவற்றதாக இருந்தது.

இது சாதாரண “கண் சிவப்பு” அல்ல. இது கருவிழியில் ஏற்பட்ட மிகத் தீவிரமான தொற்று பாதிப்பு (Fulminant Bacterial Keratitis).

அவரை உடனடியாக அனுமதித்து, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை வீரியமிக்க ஆன்டிபயாடிக் சிகிச்சையைத் தொடங்கினோம்.

இத்தகைய சூழலில், 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கா விட்டால் பார்வை முழுமையாகப் பறிபோகும் அபாயம் உண்டு.

 

நிலைமை ஏன் இவ்வளவு மோசமானது?

இதற்குக் காரணம் விழுந்த தூசியோ அல்லது கிருமியோ மட்டும் அல்ல.

முறையான மருத்துவ ஆலோசனையின்றி ஸ்டெராய்டு (Steroid) கண் மருந்துகளைப் பயன் படுத்தியதே முதன்மையான காரணம்!

 

ஸ்டெராய்டுகள் என்ன செய்யும்?

1. அவை நோயின் அறிகுறிகளை மறைக்கும். (கண் குணமாகுவது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் நோய் தீவிரமாகும்).

2. கண்ணின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைச் சிதைக்கும்.

இதுவே மிகப் பெரிய ஆபத்து.

3. பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளர்வதற்கு வழிவகுக்கும்.

இறுதியாக எங்களால் முடிந்தவரை தீவிர சிகிச்சை அளித்தோம்.

ஆனால், அதற்குள்ளாகவே அவரது கருவிழி உருகத் தொடங்கி (Corneal melting), அழுகத் தொடங்கியது.

கண் முழுமையாகப் பாதிக்கப் படுவதைத் தடுக்க அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இருப்பினும், அவரது பார்வையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாமல் போனது.

ஆகவே “கண் சிவப்பாவது” என்பது எப்போதும் சாதாரணமான ஒன்று அல்ல.

எளிமையானது என்று நாம் நினைக்கும் ஒரு பிரச்சனைக்குப் பின்னால் மிகப் பெரிய ஆபத்து ஒளிந்திருக்கலாம்.

மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாகவே மருந்து உட் கொள்வதைத் (Self-medication) தவிர்க்கவும்.