சிவாஜிலிங்கத்திற்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை

41

மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், வல்வெட்டித்துறை நகர சபையின் தற்போதைய தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு கடந்த ஜூன் 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து அவருக்கு தேவையான மருத்துவ கண்காணிப்புகளும் சிகிச்சைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சத்திர சிகிச்சை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் சிகிச்சைகளுக்காக பல்வேறு வழிகளில் உதவிய தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், அரசியல் தலைவர்கள், அமைப்புகள், நண்பர்கள், கொடையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நல்உள்ளங்களுக்கும் தமிழ்த்தேசியக் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

மேலும், சிவாஜிலிங்கம் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.