மயிலிட்டி மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவு – மக்கள் இயக்கம் கோரிக்கை..! 

29

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கு காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஆதரவு வழங்கவுள்ளதாகவும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு

15/ 6 /1990 அன்று மயிலிட்டியிலிருந்து இடம் பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புலம்பெயர்ந்தும் வசித்து வருகின்ற மயிலிட்டி மக்கள் தமது சொந்த காணிகளில் வாழ முடியாது p துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது காணியுரிமைக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும். அதிகளவான தனியார் காணிகள் வடக்கிலே முப்படைகளும் வைத்திருக்கின்றார்கள்.

வயாவிளான் பகுதியில் மக்களுடைய காணிக்குள் இப்போதும் பாரிய இராணுவ மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு கொண்டிருக்கின்றது.

யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையிலும் மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்குரிய நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை. இப்போது ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கம் கடந்து வந்த மூன்று தேர்தல்களிலும் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே பல விடயங்களை செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். அதில் ஒன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது. மக்களுடைய , காணிகளை மக்களுக்கு உடனடியாக வழங்குவோமே என்பதும். அவற்றை நம்பித்தான் எங்களுடைய மக்களும் அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் நம்பி வாக்களித்த மக்களுக்கு இன்று வரை காணிகள் விடுவிக்கப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் தண்ணி முறிப்பு, ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து

1984/12 /24 இடம் பெயர்ந்த குடும்பங்களது காணிகளும் விடுவிக்கப்படவில்லை. 42 வருடங்களாக மீள குடியேற முடியாமல் துன்ப படுகின்றனர்.

இதே போன்றுதான் வலி வடக்கிலும் 36 வருடங்களுக்கு மேலாக காணிகள் விடுவிக்கப்படாமலிருக்கின்றன.

நாட்டில் யுத்தம் இல்லை. யுத்தம் முடிவடைந்து விட்டது என்று கூறுகின்ற அரசாங்கம் ஏன் மக்களுடைய காணிகளை இன்னும் விடுவிக்கவில்லை? இதற்குரிய காரணம் புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் கலைமகள் வித்யாலயம் இராணுவ முகாமிற்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டு பாடசாலைகள் இராணுவ முகாம்களிற்கு எதிரே இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களுடைய காணிகளில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேறி அதனை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

இந்நிலையில் மயிலிட்டி மக்களால் 36 வருடங்களை கடந்து 37-வது வருடங்களில் இடம்பெயர்ந்து இருக்கின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நடாத்தப்படவிருக்கின்ற போராட்டத்திற்கு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு மக்களின் நலன்களுக்காக போராடுகின்ற அனைத்து பொது அமைப்புகளும் இந்த மக்களின் காணிகள் விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.