முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்கள்: நான்காவது நாளாகத் தேடுதல்

37

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்களையும் அவர்கள் பயணித்த படகையும் தேடும் நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. MLT/1742 என்ற இலக்கமுடைய படகில் சென்ற புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.

இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று எட்டு படகுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலும் காணாமல் போன மீனவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் புயலின்போது ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் படகு வேறு கடற்பரப்புக்குச் சென்றிருக்கலாம் என்ற சாத்தியம் முன்வைக்கப்பட்டாலும், அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட அயல்நாடுகளின் உதவியையும் தகவல் பரிமாற்றத்தையும் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது