யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கு ரூ.5,500 மில்லியனுக்கும் அதிக நிதி

30

யாழ்ப்பாண மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திடமிருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் மொத்தமாக ரூ.5,500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாக மாவட்டச் செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். அரசாங்க நிதி ஒதுக்கீடாக சுமார் ரூ.4,500 மில்லியனும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.1,005 மில்லியனும் குறிப்பிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளுக்கான வழிகாட்டல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவட்டச் செயலர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அபிவிருத்தித் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுக்க அரச நிர்வாகம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றால் ஏற்பட்ட உண்மையான பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மட்டுமே திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதற்கான சான்றல்ல என்பதால், நிதிப் பயன்பாடு மற்றும் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள் முக்கியமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.