பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி! கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு!

39

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (16.07.2026) நடைபெற்ற இந்தக் கூட்டம், கடற்றொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.
கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற நிலையில், திருவையாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தென்னைச் செய்கை விநியோகம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் அவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்த சிலருக்கும் அவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்பாகவும் அர்ச்சுனா கருத்துகளை வெளியிட்டதாகவும், இதனால் கூட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும், பின்னர் சில அரச அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கூட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டதுடன், கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினரால் கூட்ட அரங்கிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகவில்லை.