கச்சத்தீவை மீட்க வேண்டும் – நடிகர் விஜய் ஆவேசம்; இது எங்களது நிலம் என இலங்கை ஜனாதிபதி திட்டவட்டம்!

153

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கஆகியோரின் கச்சத்தீவு குறித்த மாறுபட்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கச்சத்தீவை மீட்டெடுப்போம்: நடிகர் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசை நேரடியாக சாடினார். அவர் பேசியதாவது:

“நமது தமிழக மீனவர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற ஒரே வழி கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்பதுதான்.”

மேலும், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, எங்களது மீனவர்களின் பாதுகாப்பிற்காக கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டுத் தாருங்கள்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

இது எங்களது சொந்த நிலம்: இலங்கை ஜனாதிபதி 

மறுபுறம், கச்சத்தீவு தொடர்பாக எழுந்துள்ள விவாதங்களுக்கு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

“கச்சத்தீவு என்பது இலங்கையின் ஒரு அங்கமே. அதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தப் பரப்பு, கடல் மற்றும் வான்வெளி அனைத்தும் இலங்கை மக்களுக்கே சொந்தமானது.”

“எந்தவொரு சக்தியும் எங்களது இறையாண்மையில் தலையிடவோ, எங்களது நிலத்தை ஆதிக்கம் செலுத்தவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”

புதிய சுற்றுலாத் திட்டம்

இலங்கை ஜனாதிபதி தனது உரையில், கச்சத்தீவு உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தப் போவதாக அறிவித்தார். யாழ்ப்பாணம் மற்றும் கச்சத்தீவை உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய சுற்றுலாத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே ஒரு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.