சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி!

41

முறையான வசதிகள் இல்லை… ஆடம்பரப் பின்னணி இல்லை… ஆனால், சாதிக்க வேண்டும் என்ற அசாத்திய துணிச்சலும், கைகளில் திறமைமிக்க தூரிகையும் மட்டுமே இருந்தது! இன்று ஒட்டுமொத்த உலகையுமே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் நம் நாட்டு மாணவி ஒருவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவியும், கண்டி – புப்புரஸ்ஸ (டெல்டா வடக்கு) தோட்டத்தைச் சேர்ந்தவருமான ராமர் சுசாந்திக்கா சர்வதேச அளவில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

‘இலங்கை மெராக்’ (Merac) தொண்டு நிறுவனமும், உலகப் புகழ்பெற்ற கின்னஸ் உலகச் சாதனை (Guinness World Records) நிறுவனமும் இணைந்து நடத்திய சர்வதேச ஓவியப் போட்டியிலேயே இந்த இமாலய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திறமைவாய்ந்த ஓவியர்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்டப் போட்டியில், ‘Abstract Painting’ (அருவக் கலை) பிரிவில் போட்டியிட்ட சுசாந்திக்காவின் தூரிகை வண்ணம் நடுவர்களை வியக்க வைத்துள்ளது.

அனைத்து சர்வதேசப் படைப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, ‘சிறந்த ஓவியர்’ (Best Artist) என்ற வரலாற்றுப் பெருமையுடன் கூடிய கின்னஸ் சாதனைச் சான்றிதழை (Guinness World Record Certificate) இவர் தட்டிச் சென்றுள்ளார்.

தோட்டப்புறப் பின்னணியில் இருந்து வந்து, பல்கலைக்கழகக் கல்வியோடு தனது திறமையையும் மெருகேற்றி, சர்வதேச மேடையில் கின்னஸ் சாதனை படைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. வசதி வாய்ப்புகள் தடையில்லை, உழைப்பும் திறமையும் இருந்தால் உலகையே ஆளலாம் என்பதற்கு சுசாந்திக்கா ஒரு வாழும் உதாரணம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும், ஒட்டுமொத்த இலங்கைக்கும் பெருமை சேர்த்த இந்த மலையகத் தங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் மழையெனக் குவிந்து வருகின்றன.