மருத்துவரை மிரட்டி 60 இலட்சம் சுருட்டிய முன்னாள் நர்ஸ் மற்றும் கணவர்.!!

62

கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய முன்னாள் செவிலியர் ஒருவரும் அவரது கணவரும், விசேட வைத்தியர் ஒருவரை டிஜிட்டல் பிளாக்மெயில் மூலம் மிரட்டி 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 24 வயதுடைய முன்னாள் செவிலியருக்கும் குறித்த மருத்துவருக்கும் இடையே முன்பு நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணும், முன்னாள் இராணுவச் சிப்பாயான அவரது கணவரும், மருத்துவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பயன்படுத்தி பணம் கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது.

அவமானம் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் ஏற்படும் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட மருத்துவர் பல தவணைகளில் தம்பதியினரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மொத்தமாக 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகை பெறப்பட்டதாகவும், அந்த பணத்தில் சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரட்டல்கள் தொடர்ந்ததை அடுத்து மருத்துவர் தெல்தெனிய பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதுடன், மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் வரும் மே 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இணைய வழி மிரட்டல்கள் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு குறித்து சமூகத்தில் மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.