இனி ஒரு நாள் 25 மணி நேரமாக மாறும் : நாசா விஞ்ஞானிகள் தகவல்!!

103

தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகக் கணக்கிடப்படும் நிலையில், எதிர்காலத்தில் அது 25 மணி நேரமாக மாறக்கூடும் என நாசா விஞ்ஞானிகளும் வானியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். பூமியின் சுழற்சியில் ஏற்பட்டு வரும் மெதுவான மாற்றங்களே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. பூமி தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் நிலையில், இந்த சுழற்சி வேகத்தில் மாற்றம் ஏற்படுகிறது என விளக்கப்பட்டுள்ளது.

நிலவு மற்றும் பூமிக்கு இடையிலான ஈர்ப்பு விசை பரிமாற்றம், குறிப்பாக கடல் அலைகளின் உராய்வு காரணமாக பூமியின் சுழற்சி வேகம் மெதுவாக குறைந்து வருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதனால் நிலவும் பூமியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறிய அளவில் விலகிச் செல்கிறது. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் பூமியின் சுழற்சி வேகம் சுமார் 1.7 மில்லி விநாடிகள் குறைந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் மிக நீண்ட காலத்தில் மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், சுமார் 200 மில்லியன் (20 கோடி) ஆண்டுகள் கழித்தே ஒரு நாள் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் 18 மணி நேரமாக இருந்தது, டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அது சுமார் 23 மணி நேரமாக இருந்தது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால், பூமியின் சுழற்சி வேகம் குறைவதும் நாளின் நேரம் அதிகரிப்பதும் இயற்கையான பிரபஞ்ச நிகழ்வு என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் இந்த மாற்றம் நிகழும் காலம் மனித குலத்தின் தற்போதைய காலக்கட்டத்துக்கு அப்பாற்பட்டது என்பதால், இது பிரபஞ்சத்தின் ஆச்சரியமான நீண்டகால மாற்றங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.