ஒருதலைக்காதல் தகராறு : 11 வயது சிறுவன் கொடூரமாக கொலை.!

159

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், ஆஷா என்ற பெண்ணின் 11 வயது மகன் சிவராஜ், அதே ஊரைச் சேர்ந்த 45 வயதான மதுரா ராஜக் என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஷாவின் கணவர் நாசிக்கில் கூலி வேலை செய்து வருவதாகவும், ஆஷா உள்ளூரில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் ஒருதலையான காதல் விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

ஆஷாவை கடந்த சில ஆண்டுகளாக மதுரா ராஜக் ஒருதலையாக காதலித்து, திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஆஷா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் வற்புறுத்தியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் மதுரா மிரட்டல் விடுத்து சென்றதாகவும், இதுகுறித்து ஆஷா தனது வேலை செய்த வீட்டின் உரிமையாளரிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மதுராவின் கடைக்குச் சென்று எச்சரித்ததால், மதுரா கடும் கோபமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ஆஷாவை பழிவாங்கும் நோக்கில் அவரது வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற மதுரா, அங்கு தனியாக இருந்த சிறுவன் சிவராஜை தாக்கி கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

பின்னர் சடலத்தை வீட்டிலிருந்த ஒரு டிரம்மில் வைத்து மூடி சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆஷாவின் மகள் சஜல் வீட்டிற்கு வந்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.