ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: அணு திட்ட விவகாரம் மீண்டும் பதற்றம்.!

69

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதே இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கான முக்கிய காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலைப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்கா தனது சர்வாதிகார அணுகுமுறையை கைவிட்டால் மட்டுமே உடன்பாட்டுக்கான வாய்ப்பு உருவாகும் என தெரிவித்துள்ளார். மேலும், தனது எக்ஸ் பதிவில் ஈரான் உரிமைகளை அமெரிக்கா மதித்தால் உடன்பாடு சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, போரை முடிவுக்கு கொண்டு வர நேர்மையான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அமெரிக்கா அதை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சூழ்நிலையில், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் பதற்றமடையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.