ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதல்முறையாக பெண் தளபதி நியமனம்.

60

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிகாரி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயில், வரும் ஜூலை மாதம் இந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அவர் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார்.

பெண் அதிகாரிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளும், இராணுவத்தில் நிலவும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு குறித்த குற்றச்சாட்டுகளை சரிசெய்யும் சூழலிலும் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஆஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் தளபதியாக பொறுப்பேற்க இருப்பதை முக்கிய சாதனையாக குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் இதை “வரலாற்று தருணம்” என வர்ணித்ததுடன், பெண்களுக்கு இது ஊக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த 55 வயதுடைய சூசன் கோயில், இராணுவ சேவைப் பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தற்போது பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்கு சுமார் 21% ஆக உள்ள நிலையில், 2030ஆம் ஆண்டுக்குள் அதை 25% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட் பாதுகாப்புப் படையின் ஒட்டுமொத்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரியர் அட்மிரல் மேத்யூ பக்லி கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.