மலையக பொலிஸ் நிலையங்களில் தமிழ் அதிகாரிகள் விரைவில் நியமனம் – அரசு உறுதி.

123

மலையகத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில், சபரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

கலந்துரையாடலில், மலையகத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென பிரதி அமைச்சர் கோரிக்கை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜயபால, குறித்த பிரதேசங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதேவேளை, மலையக பகுதியில் சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் அதன் உற்பத்தியை முழுமையாகத் தடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.