செம்மணி மனிதப் புதைகுழி அறிக்கை: நீதிமன்ற உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை.

31

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவ தயாரித்த இடைக்கால அறிக்கை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் பிரதிகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அவர்கள் அறிக்கையை ஆராய்ந்து தமது கருத்துகளையும் அவதானிப்புகளையும் முன்வைக்க முடியும்.

மேலும், தோண்டி எடுக்கப்பட்ட மாதிரிகளின் காலத்தை அறிவதற்கான கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்ள அனுமதி கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை நவம்பர் 19ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.