நிந்தவூர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு!

76

அம்பாறை நிந்தவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நேற்று மாலை கைது செய்ய குறித்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், சூரியன் செய்திப் பிரிவுக்குக் குறிப்பிட்டார்.

காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் திடீர் சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக அவர் கூறினார்.

இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் இளைஞனின் உடலம் மீதான சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

முன்னதாக, நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், சூரியன் செய்திப் பிரிவுக்குக் குறிப்பிட்டார்.