காக்கைத் தீவு, கல்லூண்டாய் தீ விபத்துகள் குறித்து விசாரணை அவசியம் – வரதராஜன் பார்த்திபன் வலியுறுத்தல்

153

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் தீ விபத்துகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முக்கிய கழிவு சேகரிப்பு மையங்களான காக்கைத் தீவு மற்றும் கல்லூண்டாய் பகுதிகளில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி காக்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் எழுந்த புகை மூட்டம் கொக்குவில், ஆனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை பாதித்த நிலையில், அதனைத் தொடர்ந்து 24ஆம் திகதி கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு மையத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரே வகையான தீ விபத்துகள் தொடர்ச்சியாக இடம்பெறுவது சாதாரண சம்பவமா அல்லது திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவா என்ற சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கல்லூண்டாயில் ஏற்பட்ட தீ விபத்து இடம்பெற்ற இரவு நேரத்தில் அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் இருந்தபோதிலும் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் எவரும் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கழிவகற்றல் முகாமைத்துவத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை அதிக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்போதைய அலட்சியம் தொடருமானால் எதிர்காலத்தில் சட்டரீதியான தடைகள் உருவாகி, அதன் பாதிப்புகளை யாழ்ப்பாண மாநகர மக்களே எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளார்.

எனவே, கழிவகற்றல் முகாமைத்துவத்தில் உடனடி மற்றும் நிலையான தீர்வுகளை முன்னெடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.