நெடுந்தீவில் காணாமல் மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது.!! 

57

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்றில், கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரின் சடலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெடுந்தீவு திருலிங்கபுரத்தை நிரந்தர முகவரியாகவும், தாளைத்துறையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட 41 வயதுடைய என்பவரே இந்த துயர சம்பவத்தின் பலியாகியுள்ளார்.

கடந்த ஜூன் 11 ஆம் திகதி வழக்கம்போல் கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பாததால் குடும்பத்தினரும் உறவினர்களும் கடும் கவலையில் இருந்தனர். அவரைத் தேடும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று (19) இந்தியாவின் நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அடையாளங்களைக் கொண்டு அது இலங்கை மீனவர் சடலமென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான மீனவர் மரணம் நெடுந்தீவு மக்களிடையே பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக நம்பிக்கையுடன் காத்திருந்த குடும்பத்தினருக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இந்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.