திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பெற்ற வெற்றி நேர்மையான வெற்றி இல்லை என இனிகோ இருதயராஜ் வழக்கு பதிவு.!

98

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக முன்னாள் எம்எல்ஏவும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவருமான இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின்போது 18 வயதுக்குக் குறைவானவர்களை பயன்படுத்தியதாகவும், வருமான வரி தொடர்பான நிலுவை வழக்கு விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், சமூக வலைதளப் பிரச்சாரங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் மூலம் வெற்றி பெற்றதாகக் கூறி, விஜயின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், விஜய் ராஜினாமா செய்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும், தேர்தல் வழக்கு விசாரணை முடியும் வரை இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடாது என்றும் மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.