சம்மாந்துறையில் புலிகள் புதைத்த ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி விசேட அகழ்வு.!

83

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியில், கடந்த யுத்தக் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடும் நோக்கில் [17.06.2026] விசேட அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பக்கோ இயந்திரங்களின் உதவியுடன் பல பகுதிகள் தோண்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. எனினும், பல மணி நேர தேடுதலின் பின்னர் எந்தவொரு ஆயுதம், தங்கம் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளும் மீட்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அகழ்வு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த விசேட நடவடிக்கையை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் மற்றும் பொலிஸ், நிர்வாக, பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் துறை அதிகாரிகள் நேரில் கண்காணித்தனர். எதுவும் மீட்கப்படாத போதிலும், கிடைத்த தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் யுத்தக் கால மறைவிடங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், யுத்தக் காலத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.