கொழும்பு காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு.

50

கொழும்பிலுள்ள காலி முகத்திடலில் [14.06.2026] நடைபெற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வில் 5,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா ஹொலிடேஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, கின்னஸ் உலக சாதனை முயற்சியாக வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி” (The Largest Bharatanatyam Dance Lesson) என்ற பிரிவில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே தாளம் மற்றும் ஒரே லயத்தில் நடனமாடினர். கின்னஸ் உலக சாதனை அமைப்பின் விதிமுறைகளுக்கு அமைவாக உத்தியோகபூர்வ கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

“சங்கமம்-2026” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலை மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இந்த சாதனையை வரவேற்று வருகின்றனர்.