மாம்பழம் சாப்பிட்ட  இரு சிறுமிகள் உயிரிழப்பு.!

44

ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட பின்னர் உடல்நலக்குறைவுக்கு ஆளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த வைஜிநாத் – இந்துமதி தம்பதியினர் தங்கள் நான்கு மகள்களுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், உறவினர் ஒருவர் கொண்டு வந்த மாம்பழங்களை தாயாரும் நான்கு மகள்களும் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் ஐந்து பேருக்கும் திடீரென வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்பத்தின் மூன்றாவது மகளான 17 வயதுடைய புவனேஸ்வரி [08.06.2026] உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து இளைய மகளான 10 வயது சந்தியா [09.06.2026] உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயாரும் மற்ற இரண்டு மகள்களும் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சீரடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வீட்டிலிருந்து மாம்பழங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

உயிரிழப்புக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை மற்றும் ஆய்வக அறிக்கைகள் கிடைத்த பின்னரே உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உணவு நச்சுத்தன்மையாலா அல்லது பழங்களில் இருந்திருக்கக்கூடிய இரசாயனங்களாலா ஏற்பட்டது என்பது தற்போது  விசாரணைக்குட்பட்டுள்ளது. இந்த சம்பவம் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளதுடன், சந்தையில் வாங்கப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.