கோடிக்கணக்கில் கொள்ளை! 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.!!

63

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற கோடியே 15 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பிரதான சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்!

கடந்த 27ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர்கள், வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆராய்ந்ததில் சந்தேகநபர்களின் நடமாட்டங்கள் அம்பலமாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள்:

▪️ கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன்

▪️ 19 வயது இளைஞன்

ஒருவர் வல்லைச் சந்தியிலும், மற்றையவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில் வெளியாகிய தகவல்களின்படி, வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர்கள் அங்கு பெருமளவு பணம் இருப்பதை கண்டதும், நெடுங்கேணியில் இருந்த மூன்றாவது நபருக்கு காணொளி அழைப்பு மூலம் காட்டியுள்ளனர்.

அதற்கு அந்த நபர், “முழுப் பணத்தையும் எடுத்துக்கொண்டு வாருங்கள்” என கூறியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நெடுங்கேணிக்கு கொண்டு செல்லப்பட்டு, காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுவரை 74 இலட்சம் ரூபாய் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நெடுங்கேணியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் சென்றபோது, அவர் தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவரை கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணை நடத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.