கொழும்பில் பதிவான இரண்டு கொலை சம்பவங்கள்..! அகற்றப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள்

47

கொழும்பில் இரண்டு வேறு இடங்களில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகலங்கமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

வீட்டை சோதனையிட்டபோது, படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து 79 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்த பெண் தனியாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராக்கள் அகற்றப்பட்டிருந்ததுடன், தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஃபர்கியுசன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 31 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முகத்துவாரம் உயன அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்ய கிரேன்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.