உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சம்!

60

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் வசித்து வரும், பிள்ளையானின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான அசாத் மௌலானாவிடம் CID அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் பிரான்ஸிற்குச் சென்று இந்த வாக்குமூலத்தை பதிவு செய்ததாக கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றில் விரிவான தகவல்களை சமர்ப்பித்தார்.

சுரேஷ் சலே, 2017ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினரின் ஆதரவைப் பெற திட்டமிட்டிருந்ததாக அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் குழுவினரையும், சஹ்ரான் குழுவினரையும் அன்றைய இராணுவப் புலனாய்வுப் பிரிவு பராமரித்து வந்ததாக நீதிமன்றில் கூறப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, லசந்த விக்ரமதுங்க, உபாலி தென்னகோன், கீத் நோயர், சிவராம் உள்ளிட்டோரின் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களுடனும் இந்தக் குழுக்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுரேஷ் சலே, 2006க்குப் பிறகு பிள்ளையானுடன் தொடர்பில்லை என தெரிவித்திருந்தாலும், தாக்குதலுக்குப் பின்னர் அஹுங்கல்லை ஹோட்டலில் பிள்ளையான் குடும்பத்தினருக்கும் அசாத் மௌலானாவுக்கும் விருந்து வழங்கியுள்ளதாகவும், அது ஹோட்டல் பதிவு புத்தகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் “தீர்மானமிக்க நாள்” வரும்வரை இந்தக் குழுவினர் பாதுகாக்கப்பட்டதாகவும், அரசியல் நோக்கத்திற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இராணுவ இலக்குகளைத் தாக்க திட்டமிட்டிருந்த குழு, பின்னர் கத்தோலிக்க மக்களின் மிக முக்கிய நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தை இலக்காகத் தேர்ந்தெடுத்ததாக நீதிமன்றில் கூறப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையானைச் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் பிணை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்மைக் காலங்களில் சந்தேக நபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சுரேஷ் சலேவை நீதிமன்றில் ஆஜர்படுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தமக்கு அச்சம் இருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கின் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.