வியட்நாமில் நடைபெறும் ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பிற்கு மட்டக்களப்பு மாணவி தவிசாலினி தெரிவு.!!

75

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 17 வயதுடைய இவர், சர்வதேச மல்யுத்த அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

கண்டி திகன பகுதியில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிப் போட்டியில் தவிசாலினி முதலிடத்தைப் பெற்றதன் மூலம், வியட்நாம் போட்டியில் 69–73 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இவருடன் மேலும் 11 வீரர், வீராங்கனைகள் இலங்கை அணியின் சார்பில் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். இலங்கையின் 17 வயதுக்குட்பட்ட மல்யுத்த அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் செயற்பட்டு வருகிறார்.

16 வயதிலிருந்து மல்யுத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் தவிசாலினியின் இந்த சாதனை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இலங்கை விளையாட்டுத்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது. சர்வதேச போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.