“தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய கே. ராஜனின் சோக முடிவு!”

39

தமிழ் திரையுலகின் பிரபல மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் (85) அவர்கள் மே 17, 2026 அன்று சென்னையில் காலமானார்.

சென்னை அடையாறு மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, ஆற்றில் குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 17), கே. ராஜன் அவர்கள் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாறு மேம்பாலத்தின் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆற்றில் குதித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அடையாறு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1983 ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து டபுள்ஸ், அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ மற்றும் ‘உணர்ச்சிகள்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், தங்கமான தங்கச்சி, சின்னப் பூவை கிள்ளாதே போன்ற படங்களுக்குக் கதையும் எழுதியுள்ளார்.

திரையுலகில் 18-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘துணிவு’ மற்றும் ‘பகாசூரன்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் துணிச்சலான குரல்:

திரைப்பட விழாக்கள் மற்றும் பொது மேடைகளில் சினிமா விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களின் நலனுக்காக எதற்கும் அஞ்சாமல், மிக வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசக்கூடியவர் கே. ராஜன். இவரது மறைவுக்கு தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் உள்ளிட்ட பல முன்னணித் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.