யாழில் ஆசிரியைகள், மாணவிகள் புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாக மாற்றிய மாணவர்கள் கைது.!!

160

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் சில மாணவர்கள் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆபாசமாக மாற்றி பரப்பிய சம்பவம் வெளியாகியுள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட படங்கள் வாட்ஸ்அப் குழுக்கள் வழியாக பகிரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கையை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்து ஒன்றுகூடியுள்ளனர்.

பாடசாலை அதிபர் அளித்த முறைப்பாட்டின் பேரில், மருதங்கேணி பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்து 17 வயதுடைய 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் அச்சுவேலி பகுதியில் உள்ள நன்னடத்தை பாடசாலையில் (தடுப்புக்காவல்) புதன்கிழமை வரை தடுத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் 3 சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கவனம்: AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மிகப்பெரிய சமூக மற்றும் தனியுரிமை பிரச்சினைகளை உருவாக்குகிறது. குறிப்பாக பெண்கள், தங்களது புகைப்படங்களை எவருக்கும் எளிதில் வழங்காதீர்கள். ஒரு முகப்படம் மட்டுமே இருந்தாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.