ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை:வங்கி கணக்கு மோசடி அபாயம்.!!

144

இலங்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதிய டிஜிட்டல் மோசடி தொடர்பாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ அல்லது தெரிந்த நண்பர்களின் பெயரில் இருந்தோ வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் சந்தேகத்திற்கிடமான “.apk” கோப்புகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோப்புகள் திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண விவரங்கள் அல்லது பரிசுப் போட்டிகள் போன்ற பெயர்களில் அனுப்பப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றை புகைப்படம் அல்லது PDF கோப்பு என நினைத்து திறந்தால், அவை தானாகவே தொலைபேசியில் மென்பொருளாக நிறுவப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹேக்கர்கள் கைபேசியை முழுமையாகக் கட்டுப்படுத்தி, SMS மற்றும் வங்கி OTP இரகசிய குறியீடுகளை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக வங்கி கணக்கிலுள்ள பணம் முழுமையாக திருடப்படும் அபாயம் இருப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். எனவே, அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான எந்த .

apk கோப்புகளையும் திறக்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம் என்றும், மென்பொருட்களை எப்போதும் Google Play Store அல்லது Apple App Store போன்ற உத்தியோகபூர்வ தளங்களிலிருந்து மட்டுமே பெற வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.