2 மாத பெண் குழந்தை சட்டவிரோதமாக விற்பனை; 6 பேர் மீது வழக்குப்பதிவு.!!

79

தமிழ்நாட்டின் ஆம்பூர் பெரியாங்குப்பம் பகுதியில் 2 மாத வயதுடைய பெண் குழந்தை 50,000 ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில், இடைத்தரகர்கள் மூலம் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. குழந்தையை வாங்கிய நபர் மற்றும் இந்த பரிவர்த்தனையில் தொடர்புடையவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய சிலர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதுடன், அவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு குழந்தைகள் நல அமைப்பின் உதவியுடன் அரசுப் பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தை மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.