19 நாள் பச்சிளம் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட 6 பேர் கைது.!!

86

புத்தளம் மாவட்டம் ஆனமடுவ – அடிகம பகுதியில் 19 நாள் வயதான ஆண் குழந்தையை விற்க முயன்ற சம்பவம் தொடர்பில் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நள்ளிரவில் புத்தளம் குற்றப் புலனாய்வு துறையினர் (AOCB) நடத்திய நடவடிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தையை விற்க முயன்றதாக கூறப்படும் கும்பல் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட வேனும் கைது நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பெற்ற தாய், அவரது சகோதரர் மற்றும் அவரது மனைவி, குழந்தையை வாங்க முயன்ற தம்பதியினர் மற்றும் வேன் சாரதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை வெறும் 1 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த விற்பனை நடவடிக்கையில் நடுநிலையாளராகவும் தரகராகவும் ஒரு மருத்துவர் செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது புத்தளம் ஆதார மருத்துவமனையில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற நடவடிக்கைக்கு பின் குழந்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் சமூகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தை கடத்தல் மற்றும் மனிதாபிமான குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.