குருநாகலில் 16 வயது மாணவன் உயிரிழப்பு: பின்னணியில் இருந்த திடுக்கிடும் ‘ஆன்லைன் விளையாட்டு’! 

112

குருநாகல் உடவல்பொல பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவன் ஒருவர், தான் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 8ஆம் திகதி அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பொலிஸாருக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவன் தனது காலணிகளை மேல்தளத்தில் ஒழுங்காக கழற்றி வைத்திருந்ததுடன், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைபேசியில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இயங்கிக் கொண்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குடும்பத்தினர் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மாணவன் ஒரு வழக்கறிஞர் மற்றும் ஆசிரியையின் மூத்த மகன் என்றும், அண்மையில் குடும்பத்துடன் புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம், சிறுவர்களின் கைபேசி பயன்பாடு மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.