12 வயது சிறுமி மீதான கொடூரம்: தாய் உட்பட மூவர் கைது.!!

32

இந்தியாவின் வாரணாசி பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் கடுமையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்த சிறுமியை அவரது தாய், வாரணாசியைச் சேர்ந்த 40 வயது நபரிடம் பணம் மற்றும் பொருட்களுக்காக ஒப்படைத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறுமி அந்த நபரால் வாரணாசிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாரணாசியில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி, பல மாதங்களாக உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பியோடிய சிறுமி, இரயில் நிலையத்தை அடைந்தபோது உதவி செய்வதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவராலும் மீண்டும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தப்பிச் சென்று காவல்துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ (POCSO) மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தாய், சிறுமியை அழைத்துச் சென்ற நபர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு, மனிதக் கடத்தல் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.