குருணாகலில் 15 லட்சம் பணப்பையை ஒப்படைத்த சிறுவனுக்கு கிடைத்த பரிசு.!

34

குருணாகலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மகேஷ் ஷனக, வீதியில் கிடந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பணப்பையை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளது. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிறுவன், பணப்பையை கண்டவுடன் அதை தன்வசம் வைத்துக்கொள்ளாமல் அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர், பணப்பையை இழந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பொலிஸாரின் உதவியுடன் சிறுவனை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது சிறுவனின் qகுடும்பம் பொருளாதார சிரமங்களில் வாழ்ந்து வருவதை நேரில் கண்ட அவர், சிறுவனின் நேர்மையால் நெகிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மீட்கப்பட்ட பணத்தின் பெறுமதிக்கு இணையான தொகையை சிறுவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவியாக வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும் நேர்மையை கடைப்பிடித்த சிறுவனின் செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளதுடன், நல்ல பண்புகளும் நேர்மையும் இன்னும் சமூகத்தில் மதிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.