லக்னோ அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்.. 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

107

முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கனோலி இணை லக்னோ பந்துவீச்சாளர்களை கடுமையாக சிரமப்படுத்தி அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தனர்.

பிரியன்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்கள் குவித்து சதத்தை நெருங்கினார்; கூப்பர் கனோலி 46 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி பங்களிப்பால் பஞ்சாப் அணி பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு விளையாடிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் (40), ரிஷப் பண்ட் (43), எய்டன் மார்க்ரம் (42) ஆகியோர் போராடினாலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் அவுட்டானது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் தரப்பில் மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், விஜய்குமார் வைஷாக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றி பஞ்சாப் அணியின் வலுவான பேட்டிங் திறனை வெளிப்படுத்தியதுடன், அடுத்த போட்டிகளிலும் அணியின் செயல்பாடு குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.