ராஜபக்சர்களைச் சுற்றி புதையல் சர்ச்சை!

90

மொனராகலை மாவட்டத்தில் உள்ள பாலேகந்த குளத்தின் அணைக்கட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. அணைக்கட்டு உடைக்கப்பட்டதன் பின்னணியில் புதையல் தேடும் நடவடிக்கை இடம்பெற்றதாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளதாக நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் மதகம பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பாலேகந்த குளத்தின் அணைக்கட்டு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2020ஆம் ஆண்டு மே மாதம் உடைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 82.2 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டத்தின் மதிப்பீடு பின்னர் 167.26 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரசாங்கம் இந்த திட்டத்திற்காக 70.5 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் குளத்தின் புனரமைப்பு பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் 70.5 மில்லியன் ரூபாய்க்கு ஏற்ப குறிப்பிடத்தக்க பணிகள் அங்கு இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, புதையல் தேடும் நடவடிக்கையை மறைப்பதற்காகவே குளத்தின் புனரமைப்பு திட்டம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை அவசியம் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குளத்தின் புனரமைப்பு பணிகள் சுமார் ஆறு ஆண்டுகளாக நிறைவடையாமல் இருப்பதால், குளத்தை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.