செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி!

93

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (13) கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரை 583 மனித எலும்புக்கூடுகளும் பல்வேறு சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பான விசாரணைகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்மணி புதைகுழி, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலை தொடர்பான முக்கிய சான்றாக கருதப்படுவதாகவும், இதனால் இந்த விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையை விட சர்வதேச பொறிமுறையின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு அருகில் இருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் பேரணி கிட்டு பூங்கா பகுதியை சென்றடைந்து நிறைவடைந்துள்ளது.

பேரணியின் நிறைவில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்றுகூடி கூட்டமொன்றையும் நடத்தியுள்ளனர். இதன்போது செம்மணி புதைகுழி தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.