மண்முனையில் சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் அகழ்வு முயற்சி.!!

122

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்றதாகக் கூறப்படும் பரபரப்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும் வெள்ளிக்கிழமை (10) நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு மண்முனை பிரதான வீதியில் ஆலயம் அருகிலுள்ள காணியில் குழுவொன்று புதையல் தோண்டுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு விரைந்து 9 பேரைக் கைது செய்ததுடன் பூசைப் பொருட்களையும் மீட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயது சிறுவனும் அடங்குகிறார். சிறுவன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, ஜாதக காரணங்களின் அடிப்படையில் இவரை பலிகொடுக்க கடத்தி வரப்பட்டதாக வாதிட்டதுடன், மற்றொரு தரப்பு சட்டத்தரணி இச்சிறுவன் புதையல் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ‘மந்திரவாதி’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சிறுவனின் பாதுகாப்பை முன்னிறுத்தி அவரை நன்னடத்தை இல்லத்தில் வைக்கவும், ஏனைய சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க மண்முனைப் பகுதியில் அண்மைக்காலமாக இவ்வாறான புதையல் அகழ்வுகள் அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளன.