திருகோணமலை சம்பூர் கடலில் அலை தாக்கி 19 வயது இளைஞர் உயிரிழப்பு.!!

143

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் உள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென எழுந்த கடல் அலை காரணமாக இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். குடும்பத்தினருடன் சமையல் சென்றிருந்தபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளைஞரின் திடீர் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரும் உறவினர்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், கடற்பரப்புகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனும் கவனம் மீண்டும் எழுந்துள்ளது.