மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்: தரம் 3 மாணவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை.!!

52

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயது தரம் 3 மாணவனை அவரது தந்தை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் சிறுவன் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாக கூறப்பட்டதை அடுத்து, ஆசிரியர் பெற்றோரை அழைத்து முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின் ஏற்பட்ட கோபத்தில் தந்தை இந்தச் செயலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இரும்பு கம்பியை பழுக்கக் காய்ச்சி, பெற்ற மகனின் வாயில் சூடு வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிறுவன் வாய்ப் பகுதியில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கிராம உத்தியோகத்தருக்கு சம்பவம் தெரியவந்ததையடுத்து உடனடியாக சந்திவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 34 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் பொலிஸாரால் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குழந்தை பாதுகாப்பு மற்றும் பெற்றோர் ஒழுங்கு முறைகள் குறித்து சமூகத்தில் கடும் விவாதம் எழுந்துள்ள நிலையில், சம்பவம் பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.