தெல்தெனிய கொலைவழக்கில் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்.!!

138

தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்கான நேற்றிரவு (24) நுவரெலியா காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

தெல்தெனிய ஆதார மருத்துவமனைக்கு அருகில் கடந்த 17 ஆம் திகதி கைவிடப்பட்டிருந்த சிற்றூந்து ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் உடலம் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் அம்பாறை மருத்துவமனையில் இயன்முறை சிகிச்சையாளராக (Physiotherapist) கடமையாற்றிய ஷம்யா தர்ஷனி (34 வயது) என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியாவிலுள்ள விடுதியொன்றில் வைத்தே குறித்த பெண் உயிரிழந்துள்ள நிலையில், உடலத்தை சந்தேகநபர் சிற்றூந்தில் கொண்டுவந்து, தெல்தெனியவில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

அவர் உடலத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் சிசிடிவி (CCTV) கெமராவிலும் பதிவாகியிருந்தது.

இந்தநிலையில், காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையணியின் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் வழிகாட்டலில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், சந்தேகநபர் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிப்பது கண்டறியப்பட்டு, சாவகச்சேரி – கைதடி பகுதியில் வைத்து அவர் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டது.

இதன்போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபர் தொப்பி, முகக்கவசம் மற்றும் போலித் தலைமுடி (Wig) அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று மாறுவேடம் அணிந்திருந்தார்.

பிரதான சந்தேகநபர் தன்னை ஒரு தமிழர் என காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழ் வார்த்தைகளையும் கற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இந்தியாவுக்கு தப்பியோடத் திட்டமா?

கைதான சந்தேகநபர், தான் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கும் அங்கிருந்து குருணாகல் சென்று, அங்குள்ள தமது ஏனைய இரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரணடையவிருந்ததாகக் கூறினாலும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்லவே திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்

சம்பவம் நடக்கும் போது தான் திகன பகுதியிலுள்ள வீட்டில் இருந்ததாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தேகநபரால் ஏமாற்றப்பட்ட பெண்களிடம் தன்னை சந்தேகநபரின் “மூத்த சகோதரி” என்றே அடையாளப்படுத்தியுள்ளார் என்பதும், தமது மூன்று பிள்ளைகளில் இருவரை கடந்த 21 ஆம் திகதி நாரம்மலவிலுள்ள வீட்டில் விட்டுச் சென்றதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

 

சந்தேகநபர் சொன்ன பொய் – பிரேதப் பரிசோதனை அறிக்கை

தான் விடுதிக்கு சென்று பாரத்த போது குறித்த பெண் உயிரை மாய்த்து கொண்டிருந்ததால் பயந்துபோய் சடலத்தை வாகனத்தில் கொண்டுவந்து விட்டதாக சந்தேகநபர் கூறினாலும், பிரேதப் பரிசோதனையில் அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், அந்தப் பெண் தனக்குப் பணம் கொடுத்திருந்தாலும் அது 1.5 கோடி ரூபாய் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உடந்தையாக இருந்த பிரதேச சபை ஊழியர்

சந்தேகநபருக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உதவிகளை வழங்கிய குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மாலை, உடலத்துடன் சந்தேகநபர் இந்த ஊழியரின் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார்.

பின்னர் உடலத்தைக் கொண்டுசெல்ல உந்துருளியில் பின் தொடர்ந்ததுடன், சந்தேகநபரின் குடும்பத்தினரை மாத்தளையிலுள்ள தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த ஊழியரின் மனைவியிடமிருந்தும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

 

மோசடிப் பின்னணி

முன்னதாக அம்பாறை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றபோதே இந்த இயன்முறை சிகிச்சையாளருடன் சந்தேகநபர் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்தே இந்த மோசடிகளைச் செய்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடைக்கடை நடத்திய இவர், அங்கு வேலை செய்த பெண்ணிடமிருந்தும் 2 இலட்சம் ரூபாயைப் பெறத் திட்டமிட்டிருந்தார். பெண்களை ஏமாற்றிப் பெறும் பணத்தைக் கொண்டு இவர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குண்டசாலை பிரதேச சபை ஊழியர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று இரவு நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்