“சிகாடா” புதிய கொவிட் மாற்றம்: 23 நாடுகளில் பரவல் – WHO கண்காணிப்பு எச்சரிக்கை.!!

122

உலகளவில் கொவிட் தொற்று மீண்டும் கவலை ஏற்படுத்தியுள்ள நிலையில், “சிகாடா” (Cicada) எனப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” என வகைப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் தற்போது 23க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பரவல் அதிகரித்து வருகிறது.

டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் பதிவான கொவிட் பாதிப்புகளில் சுமார் 30% வரை “சிகாடா” வகையைச் சேர்ந்தவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா, புளோரிடா, நியூயோர்க், டெக்சாஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த மாற்றம் முந்தைய ஒமைக்ரோன் வகைகளை விட 70க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை கொண்டதாக கூறப்படுகிறது. தொண்டை வலி, மூச்சுத்திணறல், அதிக சோர்வு, காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவை/வாசனை இழப்பு போன்ற அறிகுறிகள் பொதுவாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்தல், மூடிய இடங்களைத் தவிர்த்தல், காற்றோட்டத்தை உறுதி செய்தல் மற்றும் தடுப்பூசிகளைப் பெறுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தற்போது கண்காணிப்பு நிலையில் இருந்தாலும், இந்த வைரஸின் பரவல் மற்றும் மாற்றங்கள் காரணமாக உலக சுகாதார அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன; அதனால் தேவையற்ற அச்சமின்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.