கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது.!

37

 

கிண்ணியா பகுதியில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06.2026) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா நடுத்தீவு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி வருவதுடன், காக்காமுனையைப் பிறப்பிடமாகவும் முனைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்போது சந்தேகநபரிடமிருந்து 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில், குறித்த ஆசிரியர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் கல்வி மற்றும் சமூக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.