தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடல்.

81

கொழும்பில், திங்கட்கிழமை தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, தமது சமூகங்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கருத்துத்தெரிவித்தனர்.

ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து உருவாக்கத்திற்கான பொதுத் தளமொன்றை அமைப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
ஒவ்வொரு கட்சியும் தங்களது தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணிக்கொண்டே, பொதுவான நலன்கள் சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயல்படவும், சாத்தியமான இடங்களில் கூட்டு ஆதரவு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானித்தனர்.

இதன்போது பின்வரும் முக்கியமான மூன்று விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டது.

01. நீதி, சமத்துவம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் அவசியம்.

02. நீண்டகாலமாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை அவசரமாக நடத்தி, ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை.

03. அனைத்து சமூகங்களையும் பாதித்துவரும் நீண்டகால காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமான, உள்ளடக்கமான மற்றும் அர்த்தமுள்ள கலந்தாய்வுகளின் மூலம் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம்.

இலங்கையில் இன நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி, தொடர்ச்சியான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக இக் கட்சிகள் தெரிவித்துள்ளன.