யோஷித ராஜபக்ஷ வழக்கில் புதிய திருப்பம்; முன்னாள் காதலி நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியம்.!

72

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில், அவரது முன்னாள் காதலி யசரா அபேநாயக்க கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியம் வழங்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அவர், 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை யோஷித ராஜபக்ஷவுடன் காதல் உறவில் இருந்ததாகவும், திருமண நோக்கில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர், ஜாதகப் பொருத்தம் இல்லையென சோதிடர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த உறவு முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், திருமணத்திற்குப் பின்னர் குடியேறுவதற்காக வீடு அமைப்பது குறித்து இருவரும் திட்டமிட்டிருந்ததாகவும், அந்த வீடு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் அவர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.

இதேவேளை, இந்த வழக்கில் கட்டிடக் கலைஞர் உள்ளிட்ட பிற சாட்சிகளும், வீட்டு வடிவமைப்பு, உள்துறை அமைப்பு, சொத்து பரிவர்த்தனைகள் மற்றும் திட்டமிடல் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கொள்வனவு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 17 ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.