உருத்திரபுரம் விபத்தில் போதைப்பொருள் பயன்பாடு சந்தேகம்: இளம் தாய் மரணம் தொடர்பில் புதிய தகவல்கள்.

279

நேற்றைய தினம் உருத்திரபுரம் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் வட்டக்கச்சி – மாயவனூர் பகுதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாரதி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், விபத்து நேரத்தில் அந்த இளைஞன் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் மதுபானம் அருந்தவில்லை என்றும் வேறு வகை போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் இடம்பெற்ற இளைஞர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கிலும் அவர் பெயர் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் சமூகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், வீதி பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.