ஹட்டன் டிக்கோயா நகரில் தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை.!

57

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்கள் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், நீண்டகாலமாக இந்த கடையில் வியாபாரம் செய்து வந்த இந்த தம்பதியினர், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாரோ ஒரு நபர் கடைக்குள் புகுந்து இவர்களைக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிள்ளைகள் இவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காததால், பிள்ளைகள் அது குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து கடையைத் திறந்து பார்த்தபோதே இந்த படுகொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன், உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.